செய்திகள்

ஆதம்பாக்கத்தில் வேப்பமரத்தில் மட்டும் மழை பெய்ததாக பக்தர்கள் பரவசம்: குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கொட்டியது தெரியாமல் பூஜை

Published On 2016-07-20 14:40 IST   |   Update On 2016-07-20 14:40:00 IST
ஆதம்பாக்கத்தில் வேப்பமரத்தில் மட்டும் மழை பெய்ததாக கூறி பக்தர்கள் பரவசமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:

ஆதம்பாக்கம் எல்.ஐ.சி. நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது வீட்டு முன் பகுதியில் வேப்பமரம் உள்ளது.

நேற்று காலை கடும் வெயில் சுட்டெரித்த நேரத்தில் அந்த வேப்பமரத்தில் இருந்து மட்டும் மழை பெய்தது போல் தண்ணீர் கொட்டியது.

இதனை பார்த்து அதிசயித்த அப்பகுதி மக்கள் அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

வேப்பமரத்தில் மட்டும் மழை பெய்ததாக கூறி அவர்கள் வழிபட்டனர். மேலும் மரத்திற்கு பூஜை செய்து கற்பூரம் காட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே எல்.ஐ.சி. நகர் பின் பகுதியில் தனியாக கோவில் கட்டியுள்ள திருநங்கைகளும் அங்கு வந்தனர். அவர்கள் வேப்ப மரத்தில் சாமி இருப்பதாக கூறி இங்கு கோவில் கட்ட வேண்டும். வீட்டு முன்புற சுவரை இடிக்க வேண்டும் என்றனர்.

மேலும் மாமல்லபுரத்தில் இருந்து சாமி சிலை ஒன்றையும் கொண்டு வந்து பூஜை செய்ய போவதாகவும் கூறினர். வேப்பமரத்தில் மட்டும் மழை பெய்தது பற்றி அறிந்து கூட்டம் கூட்டமாக ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் வந்து சென்று கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் ஆறுமுகம் வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் டாக்டர் ஒருவரது வீட்டு மாடியில் இருந்த குடிநீர் பைப் உடைந்து வேப்ப மரத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது நீண்ட நேரத்திற்கு பின்னர் தெரிந்தது. இதனை அறிந்து அங்கு திரண்டு இருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இச்சம்பவத்தால் சுமார் 3 மணி நேரம் ஆதம்பாக்கம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறும்போது, பொது மக்கள் சிலரின் அறியாமையால் இச்சம்பவம் நடந்துள்ளது. குடிநீர் குழாய் உடைந்திருப்பது தெரியாமல் வேப்பமரத்தில் மட்டும் மழை பெய்ததாக பரபரப்பை கிளப்பியுள்ளனர். நல்ல வேளையாக உடனடியாக இது தெரிந்ததால் அந்த மரமும், வீடும் தப்பியது. இல்லையெனில் அங்கேயே கோவில் கட்டி இருப்பார்கள் என்றனர்.

Similar News