செய்திகள்
இந்துமதி, காமேஷ்

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: திருமணத்திற்கு மகள் மறுத்ததால் விபரீத முடிவு

Published On 2016-07-19 12:25 IST   |   Update On 2016-07-19 12:25:00 IST
காஞ்சீபுரம் அருகே திருமணத்திற்கு மகள் மறுத்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த காட்டுப்பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி (55) விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (45). இவர்களது மகள் இந்துமதி (27), மகன் காமேஷ் (24).

இவர்களில் இந்துமதி சுங்குவார் சத்திரத்தை அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். காமேஷ் என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலை தேடி வந்தார்.

நேற்று மதியம் முத்துமாரி குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்களது பேச்சு எதுவும் அக்கம் பக்கத்தினருக்கு கேட்கவில்லை.

சந்தேகம் அடைந்த அவர்கள் முத்துமாரி வீட்டுக்குள் சென்று பார்த்த போது, முத்து மாரி, சரஸ்வதி, இந்துமதி, காமேஷ் ஆகிய 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. அருகே வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்தது.

காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இன்று காலை பிரேத பரிசோதனை முடிந்து 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்திய போது ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்தது குறித்து உருக்கமான தகவல் கிடைத்தது. கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய இந்துமதிக்கு பெற்றோர் காஞ்சீபுரம் அருகே உள்ள நீர்வள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் பேசி முடிவு செய்து இருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாப்பிள்ளை வீட்டார் இந்துமதியை பெண் பார்த்து பிடித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் இந்துமதி திருமணம் வேண்டாம் என்று மறுத்தார். அவரை பெற்றோர் சமாதானம் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாப்பிள்ளை வீட்டிற்கு முத்து மாரி குடும்பத்துடன் சென்று மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்ய இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து இந்துமதி தகராறில் ஈடுபட்டதால் குடும்பத்தினர் அவரை கண்டித்தனர்.

இதில் மனவேதனை அடைந்த இந்துமதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து மாரி, சரஸ்வதி, காமேஷ் ஆகியோரும் அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

4 பேர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இந்துமதி வேலை பார்த்த இடத்தில் யாருடனும் நெருங்கி பழகினாரா? என்றும் விசாரணை நடக்கிறது. ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த சம்பவம்அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News