செய்திகள்

சிட்லபாக்கத்தில் சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறியதால் பரபரப்பு

Published On 2016-07-13 07:42 IST   |   Update On 2016-07-13 07:42:00 IST
சிட்லபாக்கத்தில் சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்:

சென்னையை அடுத்த சிட்லபாக்கம் லெனின் தெருவில் சாலை ஓரத்தில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது. அந்த பச்சிளம் குழந்தையின் உடலை சில நாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை யாரோ துணியில் கட்டி சாலை ஓரம் வீசி சென்று உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது.

குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறியதோடு, குழந்தையின் வலது காலை கடித்து எடுத்து சென்று விட்டதாகவும் தெரிகிறது.

குழந்தை யாருடையது? குழந்தையை வீசி சென்றது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த தெருவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் குழந்தையை வீசி சென்றவர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News