செய்திகள்

துபாய் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனர்

Published On 2016-07-13 07:21 IST   |   Update On 2016-07-13 07:21:00 IST
துபாய் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர்.
ஆலந்தூர்:

துபாய் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 23 மீனவர்களும், 2 அரேபிய மீனவர்களும் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி துபாயில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ஒரு அரேபிய மீனவர் கடலில் தவறி விழுந்து விட்டார்.

இவர்களை துபாய் அரசு ஒரு மாத நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் விடுவித்தது. ஆனால் அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சாட்சிகள் என்ற பெயரில் வீட்டுக்காவலில் சிறை வைத்தனர்.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு செய்த பரிந்துரையின் பேரில் இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை மீட்க முயற்சி செய்தனர். இதையடுத்து 23 மீனவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், சசிகுமார், பிரகாசம், சிலுவை, ஜோசப், அந்தோணி, அபிஷேக், ஜான்சன், தூத்துக்குடியை சேர்ந்த ராய்ஸ்டன், அரசு, ஜெரன் ஆகிய 11 மீனவர்கள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் துபாயில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்று இரவு 11.30 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தனர். துபாயில் உள்ள மற்ற மீனவர்கள் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News