பள்ளிப்பருவத்தில் மலர்ந்த காதல்: ஐடிஐ மாணவர் காதலியுடன் தற்கொலை
சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சந்திரசேகர் (வயது 24).
இவரும் ஆயங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகள் பிரேமலதாவும் (20) பள்ளிப்பருவத்திலேயே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்திரசேகர், எய்யலூரைச்சேர்ந்த முத்தமிழ்செல்வி என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
திருமணத்துக்கு பின்னர் சந்திரசேகர் சிதம்பரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) இறுதியாண்டு படித்து வந்தார். அவரிடம் பிரேமலதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்.
இந்த நிலையில் சந்திரசேகரும், பிரேமலதாவும் காட்டுமன்னார்கோவில் மேலபக்கத்துறையில் பாசன வாய்க்கால் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி ஆஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சந்திரசேகர்-பிரேமலதா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், வாழ்வில் ஒன்றுசேர முடியாத நாம் சாவிலாவது ஒன்று சேருவோம் என நினைத்து காதலர்கள் இந்த பரிதாப முடிவுக்கு வந்தது தெரியவந்தது.