செய்திகள்

திருமண தோ‌ஷம் நீங்க கோவில் குளத்தில் குளித்த என்ஜினீயர் தண்ணீரில் மூழ்கி பலி

Published On 2016-06-28 12:57 IST   |   Update On 2016-06-28 12:57:00 IST
திருமண தோ‌ஷம் நீங்க கோவில் குளத்தில் குளித்த என்ஜினீயர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் கடற்கரை ரோடு ரத்தினவேல் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36) என்ஜினீயர். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகசாமி கோவிலுக்கு ராஜேஷ் வந்து வழிபடுவது வழக்கம். அதன்படி இன்று காலை சென்னையிலிருந்து ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்தார்.

சாமி கும்பிடுவதற்கு முன்பு அந்த பகுதியில் சிவன் கோவில் அருகே உள்ள குளத்துக்கு குளிக்க சென்றார். குளத்தின் அருகே தனது உடைகள், செல்போன், பான்கார்டு ஆகியவைகளை வைத்து விட்டு குளிப்பதற்காக படிக்கட்டில் இறங்கினார்.

குளத்தில் 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. ஏராளமான வாலிபர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். குளத்தின் 3-வது படிக் கட்டில் இறங்கிய ராஜேஷ் திடீரென்று கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தார். ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினார்.

குளத்தில் குளித்துக் கொண்டிருந்த மற்ற வாலிபர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அவர்களது முயற்சிக்கு பலனில்லை. சிறிது நேரத்தில் ராஜேஷ் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். குளத்தில் மூழ்கிய ராஜேஷின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதையறிந்து அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். குளத்தில் இறங்கி ராஜேஷ் உடலை ஏன் மீட்கவில்லை என்று கேட்டு தீயணைப்பு படையினரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்களே குளத்தில் குதித்து ராஜேஷின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர் வைத்திருந்த செல்போன் மூலம் சென்னையில் உள்ள ராஜேஷின் அக்கா மற்றும் கடலூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஸ்ரீமுஷ்ணத்திற்கு விரைந்து வருகிறார்கள்.

ராஜேசுக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமண தோ‌ஷம் நீங்குவதற்காக கோவில் குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News