செய்திகள்

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை

Published On 2016-06-23 10:49 IST   |   Update On 2016-06-23 10:49:00 IST
சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்து நீர்த்தேக்கத்தில் விட்டனர்.

புவனகிரி:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள வல்லம்படுகை பழைய கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் முதலைகள் உள்ளன.

இந்த ஆற்றில் உள்ள கிளைவாய்க்கால்கள் வழியாக முதலைகள் அடிக்கடி கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட் டது.

மேலும் ஆற்றுக்கு குளிக்க செல்பவர்களையும் கடித்து வருவதால், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேறிய முதலை சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியின் விளை நிலத்துக்குள் புகுந்தது.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விவசாய நிலத்துக்குள் முதலை கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனக்காப்பாளர்கள் சோமசுந்தரம், ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வயல்வெளியில் கிடந்த முதலையை 1 மணி நேரம் போராடி பிடித்தனர்.

பிடிபட்ட முதலை 5 மீட்டர் நீளமும், 150 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. அந்த முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் விட்டனர்.

Similar News