செய்திகள்

கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

Published On 2016-06-22 11:09 IST   |   Update On 2016-06-22 11:09:00 IST
கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், செங்கல்சூளை, உப்பளம் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இதையடுத்து நேற்று இரவு 7.55 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இரவு 9 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்தது. விடிய விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது.

கடலூரில் முதுநகர், திருப்பாபுலியூர், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், கோண்டூர், காராமணிக்குப்பம், நடுவீரப்பட்டு, பாலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது. சூறைகாற்று வீசியதால் கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மக்கள் இருளில் தவித்தனர்.

கடலூரில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கடலூர் லாரன்ஸ் சாலை சுரங்கப்பாதையில் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பண்ருட்டியில் நேற்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. பண்ருட்டி அருகேயுள்ள புதுப்பேட்டை, காடாம்புலியூர் பகுதிகளிலும் மழை பெய்தது.

இதேபோல் விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, பெண்ணாடத்திலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

வடலூரில் நேற்று இரவு இடி மின்னலுடன் மழை கொட்டியது. வடலூர் பார்வதி புரம், ஆபத்தாரணபுரம், சோரக்குப்பம், வடக்குத்து, சந்தவெளிபேட்டை, கருங்குழி, நயினார்குப்பம், மருவாய், அரங்கமங்கலம், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது.

விழுப்புரத்தில் நேற்று இரவு 7 மணிக்கு மழை பெய்ய தொடங்கி 10 மணிவரை நீடித்தது. விழுப்புரத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அதில் சாக்கடை நீர் கலந்ததால் சேரும், சகதியுமாக காணப்பட்டது. அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து நகரசபை தலைவர் பாஸ்கரன் அறிவுரையின்பேரில் நகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் தரைப்பாலத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினர்.

விழுப்புரத்தில் சுதானாநகர் மற்றும் சிக்னல், துணைமின் நிலையம் ஆகிய பகுதிகளில் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது.

விழுப்புரம் அருகே காணைகுப்பம், பாணாம்பட்டு ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் செங்கல்சூளை வைத்துள்ளனர். தொழிலாளர் பலர் வேலை செய்து வருகிறார்கள். பலத்த மழை காரணமாக செங்கல்சூளை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அறுத்து காயவைக்கப்பட்ட செங்கல்கள் மழையால் கரைந்தன.

மரக்காணத்தில் நேற்று மாலை 4 மணி முதல் விடிய விடிய மழை பெய்தது. கீழ்புத்துப்பட்டு, அனுமந்தை, முறுக்கேரி, பிரம்மதேசம், நல்லாளம், எண்டியூர் ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியது.

மரக்காணத்தில் 3 ஆயிரம் ஏக்கர் உப்பளம் உள்ளது. பலத்த மழையினால் உப்பளத்தில் தண்ணீர்தேங்கி உள்ளது. இதனால் பல லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளது.

Similar News