போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 12 டிரைவர்-கண்டக்டர்கள் நீக்கம்
- கடந்த 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகமாக ஆட்கள் எடுக்கப்பட்டன.
- சிலர் போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடந்த 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகமாக ஆட்கள் எடுக்கப்பட்டன. அப்போது சிலர் போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அமலாக்க இயக்குனரகத்தின் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அந்த காலக்கட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஆவணங்கள் பெறப்பட்டன.
அதன்படி 12 பேர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. இவர்களில் 8 பேர் டிரைவர்கள், 2 பேர் உதவி பொறியாளர்கள், மேலும் கண்டக்டர்கள் உள்பட 2 பேரும் இதில் அடங்குவர்.
இதையடுத்து அவர்கள் 12 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.