விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் அணி தங்கம் வெல்ல வாய்ப்பு- கடைசி சுற்றில் அமெரிக்காவுடன் மோதல்

Published On 2022-08-09 06:33 GMT   |   Update On 2022-08-09 06:33 GMT
  • இந்திய ‘பி’, இந்திய ‘ஏ’, அமெரிக்கா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன.
  • இந்திய ‘பி’ அணி சுலோவாக்கியாவையும், இந்திய ‘சி’ அணி கஜகஸ்தானையும் சந்திக்கின்றன.

சென்னை:

சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் ரவுண்டு கடந்த 29-ந் தேதி தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இதன் ஓபன் பிரிவில் 186 அணிகளும், மகளிர் பிரிவில் 166 அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதன் 10-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. ஓபன் பிரிவில் இந்தியா பி-உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. இந்திய ஏ அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது. இந்திய சி அணி-சுலோவாக்கியா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.

ஓபன் பிரிவில் உஸ் பெகிஸ்தான், அர்மெனியா தலா 17 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. டைபிரேக்கர் அடிப்படையில் உஸ்பெகிஸ் தான் முதல் இடத்திலும், அர்மெனியா 2-வது இடத்திலும் இருக்கிறது.

இந்திய 'பி', இந்திய 'ஏ', அமெரிக்கா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. டை பிரேக்கர் அடிப்படையில் இந்திய 'பி' அணி 3-வது இடத்திலும், இந்திய 'ஏ' அணி 4-வது இடத்திலும், அமெரிக்கா 5-வது இடத்திலும் உள்ளன. இந்திய 'சி' அணி 28-வது இடத்தில் இருக்கிறது.

இன்று நடைபெறும் 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய 'பி' ஜெர்மனியை எதிர் கொள்கிறது. இந்திய 'ஏ' அணி அமெரிக்காவுடனும், இந்திய 'சி' அணி கஜகஸ்தானுடனும் மோதுகின்றன.

பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 3.5-0.5 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது. இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் நெதர்லாந்தையும், இந்திய 'சி' அணி 3-1 என்ற கணக்கில் சுவீடனையும் தோற்கடித்தது.

மகளிர் பிரிவில் ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா, பக்தி குல்கானி ஆகியோரை கொண்ட இந்திய 'ஏ' அணி 17 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி தங்கப் பதக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தங்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

போலந்து, அசர்பெய்டான், உக்ரைன் ஜார்ஜியா ஆகிய 3 அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. டை பிரேக்கர் அடிப்படையில் போலந்து 2-வது இடத்திலும், அசர் பெய் ஜான் 3-வது இடத்திலும், உக்ரைன் 4-வது இடத்திலும், ஜார்ஜியா 5-வது இடத்திலும் உள்ளன.

இந்திய 'ஏ' அணி கடைசி சுற்றில் அமெரிக்காவை எதிர் கொள்கிறது. இந்திய 'பி' அணி சுலோவாக்கியாவையும், இந்திய 'சி' அணி கஜகஸ்தானையும் சந்திக்கின்றன.

முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வழங்கப்படும். இதனால் இன்றைய கடைசி சுற்று மிகவும் முக்கியத்துவம் பெற்றது.

Tags:    

Similar News