செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதல்
- ஓபன் பிரிவில் இன்று இந்திய அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
- இந்திய ‘பி’ அணி, கியூபாவுடன் மோதுகிறது.
சென்னை:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 187 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் விளையாடி வருகிறார்கள்.
ஓபன் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 11 சுற்றுகளாக நடந்து வரும் இப்போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் நடந்துள்ளது. நேற்று ஓய்வு நாளாகும். இன்று 7-வது சுற்று போட்டி நடக்கிறது.
ஓபன் பிரிவில் இன்று இந்திய அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. ஹரி கிருஷ்ணா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகாசி, நாராயணன், சசிகரண் ஆகியோர் அடங்கிய இந்திய 'ஏ' அணி, சூர்யசேகர் கங்குலி, சேது ராமன், அபிஜித் குப்தா, முரளி கார்த்திகேயன், அபி மன்பு புரானிக் ஆகியோரை கொண்ட இந்திய 'சி' அணியுடன் மோதுகிறது.
இந்த சீசனில் இந்திய வீரர்கள் முதல் முறையாக நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய 'பி' அணி, கியூபாவுடன் மோதுகிறது. இந்த அணியில் டி.குகேஷ், சரின் நிஹல், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானிரானக் ஆகிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ஓபன் பிரிவில் இந்தியாவின் மூன்று அணிகளும் 10 புள்ளிகளுடன் உள்ளன.
பெண்கள் பிரிவில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்திய 'ஏ' அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்திய 'ஏ' அணி 7-வது சுற்றில் அஜர்பைஜானுடன் மோதுகிறது. அஜர்பைஜான் அணி 11 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. முதல் 6 சுற்றுகளில் அசத்திய இந்திய 'ஏ' அணி 7-வது சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளது.
வந்திகா, பத்மினி, சவுமியா திவ்யா, கோமஸ் மேரி அன் ஆகியோரை கொண்ட இந்திய 'பி' அணி இன்று கிரீஸ் அணியுடன் மோதுகிறது. இந்திய 'சி' அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த அணியில் நந்திதா, வர்ஷினி, ஈஷா கரவாடே, பிரத்யுஷா, விஷ்வா, வஸ்னவாலா ஆகியோர் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்திய பி மற்றும் சி அணிகள் தலா 9 புள்ளிகளுடன் முறையே 15 மற்றும் 19-வது இடத்தில் உள்ளன.
ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி தனது முதல் 5 சுற்றுகளில் வென்றது. 6-வது சுற்றில் அர்மேனியாவிடம் தோற்றது.
அந்த அணியில் இடம் பெற்றுள்ள குகேஷ் தான் மோதிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.