விளையாட்டு
400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா சாதனை
- 28-வது தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் நடந்து வருகிறது.
- பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 56.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தார்.
கொச்சி:
28-வது தேசிய சீனியர் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 56.04 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
அத்துடன் அவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி இலக்கையும் (57.80 வினாடி) எட்டினார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு பாட்டியாலாவில் நடந்த போட்டியில் குஜராத்தின் சரிதாபென் கெய்க்வாட் 57.21 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
கேரளாவின் அனு (58.26 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை அஸ்வினி (1 நிமிடம் 02.41 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். முந்தைய நாளில் நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் வித்யா வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.