ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
- 8-வது முறையாக இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- இறுதிப்போட்டியில் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
ஜோஹர் பாரு:
ஜோஹர் கோப்பைக்கான சர்வதேச ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
இந்திய அணியில் குர்ஜோத் சிங் (22-வது நிமிடம்), சவுரப் ஆனந்த் (48-வது நிமிடம்) பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினர். மலேசியா தரப்பில் நாவீனேஷ் பானிக்கர் 43-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். லீக் சுற்று முடிவில் இந்திய அணி 3 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு இருந்த இந்திய அணி அதற்கு பதிலடி கொடுத்து 4-வது முறையாக கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.