சென்னையில் 10-ந்தேதி தொடக்கம்: சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் 23 இந்தியர்கள் பங்கேற்பு
- மகளிா் ஒற்றையா் பிரிவில் 4 வைல்டு காா்டு வாய்ப்புகளும் இந்திய வீராங்கனைகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.
- இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2.90 கோடியாகும்.
சென்னை:
சர்வதேச டேபிள் டென்னிஸ் அமைப்பு சார்பில் 2021 ஆண்டு முதல் 'ஸ்டார் கன்டெண்டர் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2023, 2024-ல் கோவாவில் நடந்த இந்த தொடர் கடந்த ஆண்டு முதல் முறையாக சென்னையில் நடந்தது.
தற்போது 2-வது ஆண்டாக, 'ஸ்டார் கன்டெண்டர் டேபிள்டென்னிஸ் போட்டி சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் வருகிற 10-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அல்டிமேட் டேபிள் டென்னிஸ், சரத் கமல் அகாடமி, ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் ஏஐ ஆகியவை இணைந்து நடத்துகிறது.
இந்தியாவின் அனுஷா குடும்பலே, பிரியானுஜ் பட்டாச்சாா்யா ஆகியோா் வைல்ட் காா்ட் பெற்றுள்ளனா். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக அனைத்து பிரிவிலும் 23 இந்திய வீரா், வீராங்கனைகள் முதன்மை சுற்றில் இடம் பெற்றுள்ளனர்.
மகளிா் ஒற்றையா் பிரிவில் 4 வைல்டு காா்டு வாய்ப்புகளும் இந்திய வீராங்கனைகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. அனுஷா குடும்பலே, சாயலி வாணி, காவ்யா பட் மற்றும் தனிஷா கோடேச்சா ஆகியோரும். ஆண்கள் பிரிவில் அனிா்பன் கோஷ்திவ் யான்ஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோா் பிரியனுஜுடன் முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றனா்.
மானவ் தக்கா், மனுஷ் ஷா, அனுபவம் வாய்ந்த ஜி. சத்யன் , ஹா்மீத் தேசாய் ஆகியோரும் பிரதான சுற்றில் ஆடுகிறார்கள்.
இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2.90 கோடியாகும். கடந்த ஆண்டு இந்த தொடரின் போது ஓய்வு பெற்ற பிரபல இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் போட்டி இயக்குனராக பணியாற்றுகிறார்.