கிரிக்கெட் (Cricket)

2-வது இன்னிங்சில் 117 ஆல் அவுட்.. ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து

Published On 2025-08-09 17:31 IST   |   Update On 2025-08-09 17:31:00 IST
  • 2-வது இன்னிங்சில் 28.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 117 ரன்களில் ஆட்டமிழந்தது.
  • கான்வே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

புலவாயோ:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 125 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. டிவான் கான்வே 79 ரன்களுடனும், ஜேக்கப் டப்பி 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். கான்வே 153 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 130 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 601 ரன்கள் குவித்திருந்தது. ஹென்றி நிகோல்ஸ் 150 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 165 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன் நியூசிலாந்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 130 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 601 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.

பின்னர் 476 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் வலுவான நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் நிக் வெல்ச் (47 ரன்கள்) மற்றும் கிரெக் எர்வின் (17 ரன்கள்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

2-வது இன்னிங்சில் 28.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 117 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி ஜிம்பாப்பே அணியை ஓயிட்வாஷ் ஆக்கியது.

நியூசிலாந்து தரப்பில் சக்காரி பவுல்க்ஸ் 5 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி மற்றும் டப்பி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். கான்வே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Tags:    

Similar News