ஆஷஸ் தொடருடன் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பவுலர்கள் ஓய்வு? வெளியான தகவல்
- ஜோஷ் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகிய மூவரும் இணைந்து 1,750 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
- ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் இவர்கள் மூன்று பேரும் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு தூண்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஷ் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் இருந்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 15 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் இவர்கள் மூவரும் இணைந்து மொத்தம் 1,750 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளனர். 30 வயதை கடந்து விட்ட இவர்கள் அடிக்கடி காயத்தில் சிக்குகிறார்கள்.
இந்த நிலையில் நவம்பர் 21-ந் தேதி பெர்த்தில் தொடங்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் இவர்கள் மூன்று பேரும் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனை 34 வயதான ஹேசில்வுட் மறுத்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் 'தற்போதைய நிலைமையில் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஒருவேளை தொடர் முடிந்த பிறகு உட்கார்ந்து இது குறித்து சிந்திக்கலாம். நாங்கள் அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிகமான டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது. ஆஷஸ் மட்டுமின்றி, அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட போட்டிகளும் இருப்பதால் எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இன்னும் ஆர்வமாக இருக்கிறது. எங்களிடம் இன்னும் சில ஆண்டுக்கான கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சி இருப்பதாக நினைக்கிறேன்' என்றார்.