மாதந்தோறும் 30 ஆயிரம்: வினோத் காம்ப்ளிக்கு உதவிக் கரம் நீட்டிய சுனில் கவாஸ்கர்
- நீங்கள் போதை பழக்கத்தை விட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் ஏற்கனவே கூறியிருந்தார்.
- வினோத் காம்ளி உடல் நலத்தை கருத்தில் கொண்டு போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் தொடக்க வீரராக இருந்தவர் வினோத் காம்ளி. சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது நண்பராக இருந்த வினோத் காம்ளி இந்திய அணிக்காக 104 சர்வதேச ஒருநாள் போட்டிகளும், 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
திறமை வாய்ந்த வீரராக உருவெடுத்த வினோத் காம்ளி, போதை பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். இதன் காரணமாக வினோத் காம்ளிக்கு உடல் நலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தமக்கு உதவி தேவைப்படுவதாக வினோத் காம்ளி வெளிப்படையாக அறிவித்திருந்தார். இந்த சூழலில் வினோத் காம்ப்ளியின் நிலையைப் பார்த்த கவாஸ்கர் உங்களுக்கு உதவி செய்ய தான் தயாராக இருப்பதாகவும், எனினும் அதற்கு முதலில் நீங்கள் போதை பழக்கத்தை விட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தற்போது வினோத் காம்ளி உடல் நலத்தை கருத்தில் கொண்டு போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார். இதனையடுத்து சுனில் கவாஸ்கர் நடத்தி வரும் சேம்ப்ஸ் என்ற அறக்கட்டளையிலிருந்து மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் வினோத் காம்ளிக்கு வழங்க முடிவெடுத்திருக்கிறார். இதேபோன்று வினோத் காம்ளியின் மருத்துவ செலவுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் தரவும் கவாஸ்கர் அறிவித்திருக்கிறார்.
அவர் வினோத் காம்ளிக்கு உதவ முன்வந்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் கோடி கோடியாக சம்பளம் பெறும் சச்சின், கோலி போன்ற வீரர்கள் யாரும் வினோத் காம்ளிக்கு உதவ முன் வரவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.