WPL 2026: டெல்லி அணியின் பந்து வீச்சாளர் பயிற்சியாளராகிறார் வெங்கடேஷ் பிரசாத்
- மகளிர் ஐபிஎல் வரலாற்றின் முதல் 'மெகா ஏலம்' வரும் நவம்பர் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
- டெல்லி அணி தொடர்ச்சியாக மூன்று சீசன்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் கடந்த 2023-ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதன் 3-வது சீசன் இந்த வருடம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதனையடுத்து 4-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான ஏலம் துபாயிலும், 2024-ம் ஆண்டுக்கான ஏலம் ஜெட்டாவிலும் நடைபெற்றன. இந்த ஆண்டும் வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ஏலம் நடக்கலாம் என முதலில் செய்திகள் வெளியாகிய நிலையில் மகளிர் ஐபிஎல் வரலாற்றின் முதல் 'மெகா ஏலம்' வரும் நவம்பர் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக அணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த லானிங்கை ஏலத்திற்கு முன்பு கழற்றி விட்டது. அவர் டெல்லி அணியை தொடர்ச்சியாக மூன்று இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் 3 முறையும் அந்த அணி தோல்வியையே தழுவியது குறிப்பிடத்தக்கது.