TNPL 2025: மதுரையை வீழ்த்தி திருச்சி அணி கிராண்ட் வெற்றி
- 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
- ராஜ்குமார் (37) ரன்களிலும், ஜாபர் ஜமால் (17) ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
டி.என்.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, மதுரை அணி முதலில் களமிறங்கியது. திருச்சி அணியின் துல்லிய பந்துவீச்சினால் மதுரை அணி முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6-வது விக்கெட்டுக்கு இணைந்த அதிக் உர் ரகுமான்-சரத்குமார் ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் அதிக் உர் ரகுமான் 30 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. 37 ரன்னுடன் சரத்குமார் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
திருச்சி அணி சார்பில் சரவணகுமார், ஈஸ்வரன், டேவிட்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டகாரர் வசீம் அகமது 2 ரன்களிலும், ஜெயராமன் சுரேஷ் குமார் 44 ரன்களிலும் விக்கெட் விட்டனர். அடுத்து வந்தவர்களும் மதுரையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இருப்பினும் ராஜ்குமார் - ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. ராஜ்குமார் (37) ரன்களிலும், ஜாபர் ஜமால் (17) ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இறுதியில் 18.1 ஓவரில் திருச்சி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மதுரை அணி சார்பில் தாமரை கண்ணன், மெய்யப்பன் தலா 2 விக்கெட்டுகளையும், சரவணன், குர்ஜப்னீத் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.