டெஸ்ட் கிரிக்கெட் சவாலானது மற்றும் சோர்வைடையச் செய்வது: ரோகித் சர்மா
- டெஸ்ட் போட்டிக்கு தயார் படுத்துதல் முக்கியமானது.
- முதல்தர போட்டிகளுக்கு தயார் படுத்திக் கொள்வது, டெஸ்ட் போட்டியில் தாக்குப்பிடிக்க உதவியாக இருக்கும்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா மூன்று விடிவிலான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். ஏற்கனவே டி20-யில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். 38 வயதான ரோகித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் 4301 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.58 ஆகும்.
ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் நீங்கள் ஐந்து நாட்கள் விளையாட வேண்டும். மனதளவில் இது பெரிய சவாலாகும். அது நம்மை சோர்வடையச் செய்யும். ஆனால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் முதல்தர கிரிக்கெட் விளையாடி அதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்தவர்கள்.
மும்பை கிரிக்கெட், கிளப் கிரிக்கெட் போன்ற போட்டி அளவிலான கிரிக்கெட்டில் விளையாட தொடங்கும்போது அது இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் கொண்டதாக இருக்கும். மிகவும் இளம் வயதிலேயே அதற்கு ஏற்றவாறு விளையாடும் வகையில் தயார் படுத்தப்படுவோம். அப்படி தயார்படுத்துதல் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி போன்ற கடுமையான சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது எளிதாக இருக்கும்.
தயார் படுத்தலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று இளம் வீரர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆனால், படிப்படியாக மிகப்பெரிய அளவில் கற்றுக் கொள்கிறார்கள். நான் கிரிக்கெட் விளையாட்டை தொடங்கும்போது வேடிக்கை பார்ப்பது. அனுபவிப்பது என்பதாக இருந்தது.
இளையோர் பருவத்தில் தயார் படுத்துதல் குறித்து புரிந்து கொள்வதில்லை. ஆனால், அதற்கு அடுத்தக்கட்டத்திற்கு செல்லும்போது, புரிந்து கொள்வார்கள். நமக்கு சரியாக என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு தயார் படுத்துவார்கள்.
இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.