இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய வங்கதேச கேப்டன் ஷான்டோ
- முதல் இன்னிங்சில் 148 ரன்கள் விளாசினார்.
- 2ஆவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் குவித்தார்.
இலங்கை- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (148), முஷ்பிகுர் ரஹிம் (163) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 495 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை, தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 187 ரன்கள் விளாச 485 ரன்கள் குவித்தது.
10 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றதுடன் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. ஷான்டோ 56 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹிம் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ரஹிம் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஷான்டோ அபாரமாக விளையாடி சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அவர், 2வது இன்னிங்சில் சதம் அடித்து சாதனைப் படைத்தார்.
வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷான்டோ 125 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வங்கதேசம் 295 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இலங்கை அணிக்கு 296 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் கடைசி நாளான இன்று 37 ஓவர்கள் மட்டுமே மீதமுள்ளதால் போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.