null
ஆடும் லெவனில் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை- ஆஸி. டெஸ்ட் வரலாற்றில் அரிய சம்பவம்
- இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலிய அணியில் மூன்றாவது பழங்குடி வீரராக டாகெட் இடம் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய லெவன்:-
உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லெபுசென், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், பிரெண்டன் டாகெட்.
ஆஸ்திரேலிய ஆடும் லெவனில் இரண்டு பழங்குடி வீரர்கள் முதல் முறையாக இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஸ்காட் போலண்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் ஆகியோர் பழங்குடி வீரர்கள் ஆவர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறது. இதுவரை ஒரு பழங்குடி வீரர் மட்டுமே ஆடும் லெவனில் இடம் பெற்று வந்த நிலையில் தற்போது இரண்டு பழங்குடி (Indigenous) வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்காட் போலண்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் என்ற இரண்டு பழங்குடி வீரர்கள் ஒன்றாக விளையாட உள்ளனர்.
பழங்குடி ஆஸ்திரேலியர்கள் என்பவர்கள் அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெயிட் ஐலாண்டர் மக்கள். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை சில பழங்குடி வீரர்களே விளையாடியுள்ளனர். ஆண்களில் ஜேசன் கில்லெஸ்பி மற்றும் ஸ்காட் போலண்ட் மட்டுமே.
அவர்களுக்கு அடுத்து மூன்றாவது பழங்குடி வீரராக டாகெட் இடம் பெற்றுள்ளார். இது பழங்குடி சமூகத்தின் திறமையை அங்கீகரிப்பதும், கிரிக்கெட்டில் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதும் ஆகும். இது அடுத்த தலைமுறை பழங்குடி இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.