அவரிடம் பேசுங்க.. கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்கலாம்.. சூர்யவன்ஷிக்கு ராயுடு அறிவுரை
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சூர்யவன்ஷி 7 போட்டிகளில் விளையாடி 252 ரன்கள் குவித்தார்.
- குஜராத் அணிக்கு எதிராக மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்து வரலாற்று சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி இருந்தார்.
நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலத்தின் போது மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
14 வயதான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என 252 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடும் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்து வரலாற்று சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி இருந்தார்.
இந்நிலையில் மிகத் திறமை வாய்ந்த இளம் வீரராக பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷி தனது அடுத்த கட்ட கிரிக்கெட் கரியரை வெகு சிறப்பாக ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும்? என்று குறித்த சில ஆலோசனைகளை இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வைபவ் சூர்யவன்ஷியிடம் பிரைன் லாராவை போன்ற பேட்டிங் டெக்னிக் இருப்பதால் அவரிடம் ஆலோசனைகளை பெற்று தன்னிடம் இருக்கும் சிறு சிறு குறைகளை நிவர்த்தி செய்தால் மிகப்பெரிய வீரராக மாறக்கூடிய வாய்ப்பு அவரிடம் உள்ளது. அவருடைய பேட் வேகம் என்பது மிகச் சிறப்பாக உள்ளது. பந்தை அவர் அடிக்கும் விதம் அற்புதமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் அவர் அதனை மெருகேற்ற வேண்டியது அவசியம்.
எனவே அவரைப் போன்று பேட்டிங் செய்யும் லாராவிடமிருந்து பேட்டிங் செய்யும் நுட்பத்தை அவர் கற்றுக் கொண்டால் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுக்க அனைத்து தகுதிகளும் வைபவ் சூர்யவன்ஷியிடம் உள்ளது.
என்று அம்பதி ராயுடு கூறினார்.