சூர்யகுமார் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர் உமர்சாய்
- ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் உமர்சாய் 20 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
அபுதாபி:
8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 94 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா உமர்சாய் 20 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சாதனையை அஸ்மதுல்லா உமர்சாய் படைத்துள்ளார்.
மேலும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் அதிகவேக அரை சதம் விளாசிய இந்தியாவின் சூர்யகுமார் மற்றும் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் சாதனையையும் உமர்சாய் முறியடித்துள்ளார். 2022-ம் ஆண்டு ஹாங் காங்குக்கு எதிராக சூர்யகுமார் 22 பந்திலும் இலங்கைக்கு எதிராக குர்பாஸ் 22 பந்திலும் அரை சதம் அடித்திருந்தனர். அவர்களின் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் உமர்சாய்.