கிரிக்கெட் (Cricket)

கடைசி விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்: தாமதமாகும் இந்தியாவின் வெற்றி..!

Published On 2025-10-13 14:54 IST   |   Update On 2025-10-13 14:54:00 IST
  • 311 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.
  • கடைசி விக்கெட் ஜோடி 50 ரன்கள் குவித்து ஆட்டமிக்காமல் உள்ளது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் கேம்பல் மற்றும் சாய் ஹோப் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கேம்பல், டெஸ்டில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 115 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து சாய் ஹோப்புடன் கேப்டன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய சாய் ஹோப் சதம் அடித்து அசத்தினர்.

அவரும் சதம் அடித்த சிறிது நேரத்தில் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து நிதானமாக விளையாடிய வந்த கேப்டன் சேஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

இதனால் வெஸ்ட் 311 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் 41 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் 50 ரன் முன்னிலைக்குள் இந்தியா கடைசி விக்கெட்டை வீழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் உடன் ஜோடி சேர்ந்த ஜெய்டன் சீல்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன் தேவையான நேரத்தில் ரன்களும் அடித்தார். மறுமனையில் க்ரீவ்ஸ் நம்பிக்கையுடன் விளையாடினார். இதனால் இந்திய பவுலர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. தேனீர் இடைவேளை வரை இந்த ஜோடி தாக்குப்பிடித்தது.

4ஆவது நாள் தேனீர் இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 361 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 91 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ஜஸ்டின் க்ரீவ்ஸ்- ஜெய்டன் சீல்ஸ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 12.1 ஓவர்கள் தாக்குப்பிடித்து 50 ரன்கள் குவித்துள்ளது. க்ரீவ்ஸ் 35 ரன்களுடனும், சீல்ஸ் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News