நமீபியாவை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றி: சூர்யகுமார் யாதவ் பாராட்டு
- உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியை பெற்றது.
- ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது.
20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது.
இஷான் கிஷன் 24 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர் ), ஹர்திக் பாண்ட்யா 28 பந்தில் 52 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். எராஸ்மஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய நமீபியா 18.2 ஓவரில் 116 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலக கோப்பையில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியை பெற்றது.
நம்பியா தரப்பில் லோரன் ஸ்டீன்காம்ப் அதிகபட்சமாக 20 பந்தில் 29 ரன் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், அக் ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் டும், அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, பும்ரா தலா 1 விக் கெட்டும் வீழ்த்தினார்கள்.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் கூறியதாவது:-
இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதல்ல. ஆனால் சாம்சன், இஷான் கிஷன் தொடங்கிய விதம் இது ஒரு சுலபமான ஆடுகளம் என்பதை போல் உங்களுக்கு காட்டி இருக்கலாம்.
ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது.
தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த பிறகு அவர்கள் ஆடிய விதத்தை பாராட்ட வேண்டும்.
நமீபியா பந்துவீச்சாளர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் உண்மையிலேயே நன்றாக பந்து வீசினார்கள். 6 முதல் 7 ஓவர்களுக்கு பிறகு நாங்கள் 240 ரன்களுக்கு மேல் குவிப்போம் என்று நினைத்தோம்.
பும்ரா 4 ஓவர்கள் முழுமையாக வீசியது இந்திய அணிக்கு நல்ல விஷயம். அடுத்த போட்டியிலும் அவர் கண்டிப்பாக விளையாடுவார். வருண் சக்கரவர்த்தி, அக் ஷர் பட்டேல் இணைந்து நன்றாக பந்து வீசினார்கள். இந்த இணையை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது நெருக்கடியாகதான் இருக்கும்.
ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்பட்டார். அவர் எந்த நிலையிலும் பந்து வீசக் கூடியவர். வீரர்களின் கூட்டு முயற்சியை பாராட்டுகிறேன்.
இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியுமே முக்கியமானது. சிறு தடுமாற்றத்துடன் தான் இந்த தொடரை தொடங்கினோம். அதன் பிறகு நாங்கள் எங்களுடைய பாதையில் சரியாக செல்கிறோம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்திய அணி 3-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 15-ந்தேதி கொழும்பில் எதிர்கொள்கிறது.