தனி ஆளாக போராடிய ஜோ ரூட்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அந்த அணியின் கீசி கார்டி சதமத்து அசத்தினார்.
கார்டிப்:
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 47.4 ஓவரில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கீசி கார்டி சிறப்பாக அடி சதமடித்து 103 ரன்கள் எடுத்தார். ஷாய் ஹோப் 78 ரன்கள் எடுத்தார். பிராண்டன் கிங் 59 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் அதில் ரஷீத் 4 விக்கெட்டும், சாகிப் மகமுது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடினார். 6வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோ ரூட்-வில் ஜாக்ஸ் ஜோடி 143 ரன்கள் சேர்த்த நிலையில் வில் ஜாக்ஸ் 49 ரன்னில் அவுட்டானார்.
தனியாகப் போராடிய ஜோ ரூட் சதமடித்து, 166 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 48.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.