ஆசிய கோப்பை கிரிக்கெட்: போட்டி தொடங்கும் நேரம் மாற்றத்துக்கு காரணம் இதுதான்
- இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10-ம் தேதி சந்திக்கிறது.
- இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் சந்திக்கிறது.
மும்பை:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10-ம் தேதி துபாயில் சந்திக்கிறது. பரம எதிரியான பாகிஸ்தானை செப்டம்பர் 14-ம் தேதி துபாயிலும், ஓமனை செப்டம்பர் 19-ம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி ஆசிய கோப்பை போட்டிகள் மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7.30) தொடங்குவதாக இருந்தன. அந்த நேரத்தில் அங்கு அதிகப்படியான வெப்பம் இருப்பது வழக்கம் என்பதால் வீரர்கள் பெரிய சிரமத்தை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே, இதை கருத்தில் கொண்டு ஆசிய கோப்பை போட்டிகள் அரை மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என ஐக்கிய அரபு நாடுகள் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்திய நேரத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.