விளையாட்டு
தினேஷ் கார்த்திக்

உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் வந்து சேரும்- தினேஷ் கார்த்திக்

Published On 2022-05-23 05:24 GMT   |   Update On 2022-05-23 05:36 GMT
அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி, கடின உழைப்பு தொடரும் என இந்திய அணிக்கு தேர்வானது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
மும்பை:

ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜூன் 9-ந் தேதி டெல்லியில் தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, முன்னணி வேகப்பந்து வீரர்கள் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாகவும், ரிஷப்பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.

ஐ.பி.எல்.லில் அதிவேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக், அர்ஷ்தீப்சிங் ஆகியோர் முதல்முறையாக இடம் பெற்று உள்ளனர். காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ், ஜடேஜா ஆகியோர் இடம் பெறவில்லை.

தினேஷ் கார்த்திக் கடைசியாக 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் உலக கோப்பை அரை இறுதியில்ஆடினார். தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகி இருக்கிறார்.

36 வயதான தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக தினேஷ் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில்கூறி இருப்பதாவது:-

உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி, கடின உழைப்பு தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல்.லில் பெங்களூர் அணிக்காக 14 ஆட்டங்களில் விளையாடி 287 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 191.33 ஆகும்.

தினேஷ் கார்த்திக் 2004- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் இருபது ஓவரில் 32 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

Tags:    

Similar News