விளையாட்டு
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்- மூன்றாவது தங்கம் வென்றது இந்தியா
50 மீட்டர் ரைபிள் 3 நிலை கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ஷ்ரியங்கா சதாங்கி, அகில் ஷியோரான் ஜோடி வெண்கலம் வென்றது.
கெய்ரோ:
எகிப்தின் கெய்ரோ நகரில் உலக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய அணியினர் சிறப்பாக செயல்படுகின்றனர்.
அவ்வகையில் இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில், இந்தியாவின் ராஹி சர்னோபத், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். இறுதிச் சுற்றில் இவர்கள் 17-13 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் அணியை வென்றனர். இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
முன்னதாக, 50 மீட்டர் ரைபிள் 3 நிலை கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ஷ்ரியங்கா சதாங்கி, அகில் ஷியோரான் ஜோடி வெண்கலம் வென்றது. ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியா பதக்க சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 2வது இடத்தில் உள்ளது. கடைசி இரண்டு பதக்கங்களுக்கான போட்டிகள் நாளை நடைபெறுகின்றன. இப்போட்டியில் இந்தியா தங்கம் வென்று பதக்க பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.