விளையாட்டு
ரிஷாப் பண்ட், ஹனுமா விஹாரி

மொகாலி டெஸ்ட்: ரிஷாப் பண்ட், ஹனுமா விஹாரி அரைசதம்- இந்தியா முதல்நாளில் 357/6

Published On 2022-03-04 17:51 IST   |   Update On 2022-03-05 08:19:00 IST
விராட் கோலி 100-வது டெஸ்டில் அரைசதத்தை தவறவிட, ரோகித் சர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணியின் மயங்க் அகர்வால்- கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 52 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹனுமா விஹாரி களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 33 ரன்னில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு ஹனுமா விஹாரி உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளை 2 விக்கெட் இழப்பிறகு 109 ரன்கள் எடுத்திருந்தது. விஹாரி 30 ரன்களுடனும், விராட் கோலி 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளைக்குப்பின் தொடர்ந்து இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். ஹனுமா விஹாரி அரைசதம் அடித்த நிலையில், விராட் கோலி 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரிஷாப் பண்ட் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 27 ரன்னில் வெளியேறினார். ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்ததும், ரிஷாப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.



சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷாப் பண்ட் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். முதல்நாள் ஆட்டம் முடியும் வரை இந்த ஜோடி ஆட்டமிழக்கால் இருந்தது.

இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Similar News