விளையாட்டு
யாஷ் துல்

6 சதங்கள் அடிக்கப்பட்ட தமிழ்நாடு- டெல்லி இடையிலான ரஞ்சி போட்டி டிராவில் முடிந்தது

Published On 2022-02-20 12:53 GMT   |   Update On 2022-02-20 12:53 GMT
ஷாருக் கான் 194 ரன்கள் விளாசிய போதிலும், டெல்லி அணியின் இளம் வீரர் யாஷ் துல் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் கவுகாத்தியில் நடைபெற்றது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய நான்கு நாட்கள் கொண்ட இந்த ஆட்டத்தில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் யாஷ் துல் 113 ரன்களும், லலித் யாதவ் 177 ரன்களும் அடிக்க டெல்லி முதல் இன்னிங்சில் 452 ரன்கள் குவித்தது. தமிழ்நாடு அணி சார்பில் எம். முகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர், தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 5-வது வீரராக களம் இறங்கிய பாபா அபரஜித் 117 ரன்களும், ஷாருக் கான் 194 ரன்களும் விளாச தமிழ்நாடு 494 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சில் 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

பின்னர் டெல்லி அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தமிழ்நாடு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர்களான யாஷ் துல், துருவ் ஷோரே அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். இந்த ஜோடியை தமிழ்நாடு வீரர்களால் முறியடிக்க முடியவில்லை.

டெல்லி அணி 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 228 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் சதம் விளாசிய யாஷ் துல் 2-வது இன்னிங்சில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். துருவ் ஷோரே 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்சில் முன்னிலைப் பெற்ற தமிழ்நாடு அணிக்கு 3 புள்ளிகளும், டெல்லி அணிக்கு 1 புள்ளிகளும் கிடைத்தன.
Tags:    

Similar News