விளையாட்டு
ரோகித் சர்மா

ஐ.பி.எல். ஏலம் முடிந்து விட்டது: இந்திய அணிக்காக ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டும் - ரோகித் சர்மா

Published On 2022-02-16 10:35 IST   |   Update On 2022-02-16 10:35:00 IST
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.
கொல்கத்தா:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதித்தது.

அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் போட்டித் தொடர் ஒரே இடமான அகமதாபாத்தில் நடத்தப்பட்டது போல் 20 ஓவர் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மா அறிவுறுத்தி உள்ளார்.

15-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் சமீபத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. சில வீரர்களுக்கு அதிகப்படியான விலை கொடுக்கப்பட்டது. சில வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விலை போகவில்லை.

இந்திய அணியில் உள்ள வீரர்கள் ஐ.பி.எல். ஏலம், அணிகள் குறித்து விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் ரோகித் சர்மா இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

12 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக ஐ.பி.எல். ஏலத்தில் என் பெயர் இருந்தது. இதனால் அந்த உணர்வுகள் எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. தற்போது ஐ.பி.எல் ஏலம் 2 நாட்கள் நடந்தது.

இந்த ஏலத்தில் வீரர்களுக்கு ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு இருக்கும். இது இயற்கையானதுதான். ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. தற்போது வீரர்கள் சர்வதேச போட்டிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 2 வாரங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவதில் வீரர்களின் கவனம் இருக்க வேண்டும்.

விராட் கோலியின் ஆட்டம் குறித்து நான் கவலைப்படவில்லை. நீங்கள் (ஊடகங்கள்) சிறிது நேரம் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும். கோலி 10 வருடங்களுக்கு மேலாக சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார். அழுத்தமான தருணங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Similar News