செய்திகள்
இலங்கை கேப்டன் தசுன் ஷனகா - ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

Published On 2021-10-28 04:21 GMT   |   Update On 2021-10-28 04:21 GMT
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
துபாய்:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ‘சூப்பர்-12’ சுற்று லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை (குரூப்-1) எதிர்கொள்கிறது.

இலங்கை அணி முதல் சுற்றில் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றதுடன், ‘சூப்பர்-12’ சுற்றில் முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. இலங்கை அணியின் பேட்டிங்கில் அசலங்கா, பனுகா ராஜபக்சே, குசல் பெரேரா, பதும் நிசங்கா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் லஹிரு குமரா, சமிகா கருணாரத்னே, சுழற்பந்து வீச்சில் வனிந்து ஹசரங்கா நம்பிக்கை அளிக்கிறார்கள். காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத சுழற்பந்து வீச்சாளர் தீக்‌ஷனா அணிக்கு திரும்புவது கூடுதல் பலம் சேர்க்கும்.

ஆஸ்திரேலிய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 118 ரன்களுக்குள் எதிரணியை முடக்கிய ஆஸ்திரேலிய அணி 2 பந்துகள் மீதம் வைத்து தட்டுத்தடுமாறி தான் இலக்கை எட்டிப்பிடித்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் (0), மிட்செல் மார்ஷ் (11 ரன்), மோசமான பார்ம் காரணமாக தடுமாறும் டேவிட் வார்னர் (14 ரன்) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்தனர். ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் பொறுப்புடன் ஆடி அணியை கரை சேர்த்தனர். எனவே அந்த அணி தனது பேட்டிங் சறுக்கலை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் கலக்கி வருகிறார்கள்.

இலங்கை அணியினர் தங்களது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் வலுவான ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு கடும் நெருக்கடி அளிக்க முயற்சிப்பார்கள். 2-வது வெற்றியை ருசித்து தங்களது அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த இரு அணிகளும் மல்லுகட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 8 தடவை வெற்றி பெற்று இருக்கின்றன.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

இலங்கை: குசல் பெரேரா, பதும் நிசங்கா, சரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, ஹசரங்கா, பனுகா ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, சமீரா அல்லது தீக்‌ஷனா, லஹிரு குமரா, பினுரா பெர்னாண்டோ.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

Similar News