செய்திகள்
பிரான்ஸ் வீரர் ஆலிவ்

தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ரிங்கை விட்டு வெளியேற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரான்ஸ் வீரர்

Published On 2021-08-01 06:35 GMT   |   Update On 2021-08-01 06:35 GMT
இங்கிலாந்து வீரரை தொடர்ந்து தலையில் தாக்கி நிலைகுலையச் செய்ததால் பிரான்ஸ் குத்துச்சண்டை வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான குத்துச்சண்டையில் சூப்பர் வெவி வெயிட் (91 கிலோ எடைக்குள் மேல்) பிரிவில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் பிரேசர் கிளார்க்- பிரான்சின் மௌராட் ஆலிவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் பிரான்ஸ் வீரர் ஆலிவ் முதல் சுற்றில் இங்கிலாந்து வீரர் கிளார்க் மீது ஆக்ரோசமாக தாக்கினார். குறிப்பாக தலையை குறிவைத்து தாக்கினார். இதனால் கிளார்க் நிலைகுலைந்தார். முதல் சுற்றில் ஐந்து நடுவர்களிடம் இருந்து பிரான்ஸ் வீரர் ஆலிவ் 10-9, 10-9, 10-9, 9-10, 9-10 புள்ளிகள் பெற்றிருந்தார்.

எதிர் வீரரை தலையில் தாக்கக்கூடாது என நடுவர் எச்சரிக்க, 2-வது சுற்றிலும் தொடர்ந்து அவ்வாறே செய்தார். இதனால் 2-வது சுற்று ஆட்டம் 2.56 நிமிடத்தில் நிறுத்தப்பட்டு பிரான்ஸ் வீரர் ஆலிவ் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டது.

இதனால் இங்கிலாந்து வீரர் கிளார்க் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலிவ் ரிங்கை விட்டு வெளியேறாமல் அரைமணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். இருந்தாலும் தோல்வியை ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

கிளார்க் அரையிறுதிக்கு முன்னேறியதால், இங்கிலாந்துக்கு பதக்கம் ஒன்று உறுதியாகியுள்ளது.
Tags:    

Similar News