செய்திகள்
ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் - ஜோகோவிச் புதிய வரலாறு படைத்தார்

Published On 2021-06-14 12:36 IST   |   Update On 2021-06-14 12:36:00 IST
ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 தடவையும், விம்பிள்டனை 5 தடவையும், அமெரிக்க ஓபனையும் 3 முறையும் கைப்பற்றினார்.

பாரீஸ்:

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-7(6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு 5-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை அவர் 2-வது முறையாக வென்றார். இதற்கு முன்பு 2016-ல் கைப்பற்றி இருந்தார்.

இதன்மூலம் ஜோகோவிச் புதிய வரலாறு படைத்தார். 52 ஆண்டுகளில் 4 வகையான கிராண்ட் சிலாம் போட்டிகளிலும் குறைந்தது 2 முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு 1969-ல் ராட் லாவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

ஜோகோவிச் ஒட்டு மொத்தமாக 19 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்று உள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 தடவையும், விம்பிள்டனை 5 தடவையும், அமெரிக்க ஓபனையும் 3 முறையும் கைப்பற்றினார்.

பெடரர் (சுவிட்சர்லாந்து), நடால் (ஸ்பெயின்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜோகோவிச் உள்ளார். இருவரும் தலா 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்தில் உள்ளனர். இன்னும் ஒரு கிராண்ட் சிலாம் பட்டம் வெல்லும் போது அவர்களுடன் ஜோகோவிச்சும் இணைவார். 

Similar News