செய்திகள்
92 ரன்கள் குவித்த ஷிகர் தவான்

ஷிகர் தவான் அதிரடி - பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி

Published On 2021-04-18 17:50 GMT   |   Update On 2021-04-18 17:50 GMT
பிரித்வி ஷா, ஷிகர் தவான் அதிரடியில் டெல்லி அணி பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மும்பை:

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

இதனால் பஞ்சாப் அணி முதல் விக்கெட்டுக்கு 62 பந்தில் 100 ரன்கள் அடித்தது. மயங்க் அகர்வால் 36 பந்தில் 69 ரன்னில் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 12.4 ஓவரில் 122 ரன்கள் எடுத்திருந்தது. கேஎல் ராகுல் 51 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.



கிறிஸ் கெய்ல் 11 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 9 ரன்னிலும் வெளியேறினர். தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 13 பந்தில் 22 ரன்களும், ஷாருக்கான் 5 பந்தில் 15 ரன்களும் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் இறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 59 ஆக  இருக்கும்போது பிரித்வி ஷா 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னில் வெளியேறினார்.

தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய தவான் அரை சதமடித்து அசத்தினார். அவர் 49 பந்தில் 2 சிக்சர், 13 பவுண்டரியுடன் 92 ரன் எடுத்து அவுட்டானார். அப்போது டெல்லி அணி 3 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய கேப்டன் ரிஷப் பண்டுடன், ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் ரன்களை நிதானமாக சேர்த்தனர். கடைசி 4 ஓவர்களில் டெல்லி வெற்றி பெற 36 ரன்கள் தேவைப்பட்டது.

17வது ஒவரில் டெல்லி அணிக்கு ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 20 ரன்கள் கிடைத்தது. 18வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது.

இறுதியில், டெல்லி அணி 18.2 ஓவரில் 198 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. ஸ்டோய்னிஸ் 27 ரன்களுடனும், லலித் யாதவ் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News