செய்திகள்
பாக். கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான்

அடுத்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து மாற்றப்படலாம் - பாக். கிரிக்கெட் வாரிய அதிகாரி

Published On 2020-12-02 00:43 IST   |   Update On 2020-12-02 00:43:00 IST
‘அடுத்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து மாற்றப்படலாம்’ என்று பாக். கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்தார்.
கராச்சி:

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2021) அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி கொரோனா அச்சத்தால் 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில், 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம் தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘யூடியூப்’ சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் இன்னும் சில நிலையற்ற தன்மை நிலவுகிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்தியாவில் இன்னும் கொரோனா பரவல் இருக்கிறது. எனவே இந்த போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் தெளிவான முடிவு வருகிற ஏப்ரல் மாதத்தில் தான் தெரியவரும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு சீராக இல்லாததால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியினருக்கு விசா வழங்குவது குறித்து ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்தால் நன்றாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே இரு நாட்டு தொடர் நடத்துவதற்குரிய சூழ்நிலை ஏற்றதாக இல்லை. இதனால் தான் உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான உத்தரவாதத்தை கேட்கிறோம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இசான் மணியும், நானும் பொறுப்பில் இருக்கும் வரை பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிப்பார். அவர் எங்களுடைய சிறந்த பேட்ஸ்மேன், இளம் வீரர் மற்றும் மனரீதியாக வலுவானவர். இதனை எல்லாம் அறிந்து தான் நாங்கள் அவரை கேப்டனாக நியமித்தோம். அத்துடன் மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்க அவரும் விருப்பம் தெரிவித்தார். அவர் நீண்ட காலம் இந்த பதவியில் நீடிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News