செய்திகள்
ஜோகோவிச்

சாம்ப்ராசின் சாதனையை சமன் செய்தார் ஜோகோவிச்

Published On 2020-11-08 04:17 IST   |   Update On 2020-11-08 06:21:00 IST
உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆண்டின் இறுதிவரை ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துள்ளார்.
நியூயார்க்:

உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆண்டின் இறுதிவரை ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துள்ளார். அவருக்கு 2-ம் நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் தான் அச்சுறுத்தலாக இருந்தார். அடுத்த வாரம் தொடங்கும் சோபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதில்லை என்று நடால் முடிவு எடுத்திருப்பதன் மூலம், ஜோகோவிச்சின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு வந்த ஆபத்து விலகியுள்ளது.

ஆண்டின் இறுதியில் ஜோகோவிச் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரிப்பது இது 6-வது முறையாகும். ஜோகோவிச் ஏற்கனவே 2011, 2012, 2014, 2015, 2018 ஆகிய சீசன்களில் இறுதியிலும் முதலிடத்தில் இருந்துள்ளார். இதையடுத்து ஆண்டின் இறுதியில் அதிக முறை நம்பர் ஒன் இடம் வகித்த அமெரிக்க ஜாம்பவான் பீட் சாம்ப்ராசின் சாதனையை (1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை 6 முறை) சமன் செய்துள்ளார்.

33 வயதான ஜோகோவிச் கூறுகையில் ‘சிறு வயதில் பீட்சாம்ப்ராசின் ஆட்டத்தை பார்த்து வளர்ந்தவன் நான். இப்போது அவரது சாதனையை சமன் செய்திருப்பதன் மூலம் கனவு நனவாகியுள்ளது. தொடர்ந்து சிறந்த வீரராக ஜொலிக்க முயற்சிப்பேன். அதன் மூலம் மேலும் வெற்றிகளை குவித்து, பல சாதனைகளை படைப்பேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

Similar News