செய்திகள்
கேன் வில்லியம்சன், ஜேசன் ஹோல்டர்

பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Published On 2020-11-06 17:46 GMT   |   Update On 2020-11-06 17:59 GMT
கேன் வில்லியம்சன் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சகா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக கோஸ்வாமி சேர்க்கப்பட்டார்.

தேவ்தத் படிக்கல் உடன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினார். விராட் கோலி 6 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 1 ரன்னிலும் ஜேசன் ஹோல்டர் பந்தில் வெளியேறினர். 3.3 ஓவரில் 15 ரன்னுக்குள் தொடக்க வீரர்களை இழந்ததும் ஆர்சிபி திணறியது. பவர் பிளேயில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களே எடுத்தது.

3-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 7 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் 41 ரன்களே அடித்தது. ஆரோன் பிஞ்ச் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த மொயீன் அலி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். டி வில்லியர்ஸ் அரைசதம்  அடித்தாலும் முக்கியமான கட்டத்தில் 18-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் டி நடராஜனிடம் ஸ்டம்பை பறிகொடுத்தார். டி வில்லியர்ஸ் 43 பந்தில் சிக்ஸ் ஏதும் அடிக்காமல் 5 பவுண்டரியுடன் 56 ரன்கள் அடித்தார். ஷிவம் டுபே 8, வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தனர். நவ்தீப் சைனி 9 ரன்களும், முகமது சிராஜ் 10 ரன்களும் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்துள்ளது. ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டேவிட் வார்னர், கோஸ்வாமி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கோஸ்வாமி ரன்ஏதும் எடுக்காமல் ஆட்மிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டே களம் இறங்கினார். 

வார்னர் - மணிஷ் பாண்டே ஜோடி அதிரடியாக விளையாடி தீர்மானித்தது. ஆனால் 5.4 ஓவரில் 43 ரன்கள் எடுத்திருக்கும்போது டேவிட் வார்னர் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் ஆடம் ஜம்பா, சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுக்க மணிஷ் பாண்டே 24 ரன்னிலும், பிரியம் கார்க் 7 ரன்னிலும் வெளியேறினர். இதனால் போட்டி பரபரப்பாக சென்றது.

ஆனால் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி சென்றது. கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஐதராபாத் 1 ரன் எடுத்தது, 2-வது பந்தில் ரன் கிடைக்கவில்லை. 3-வது பந்தில் ஹோல்டர் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் ஹோல்டர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.

கேன் வில்லியம்சன் 44 பந்தில் 50 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 20 பந்தில் 24 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Tags:    

Similar News