செய்திகள்
உலக ஜூனியர் பேட்மிண்டன்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து

Published On 2020-10-22 20:48 GMT   |   Update On 2020-10-22 20:48 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கோலாலம்பூர்:

இந்த ஆண்டுக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை நியூசிலாந்தில் இந்த மாதத்தில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்த போட்டி அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் பல்வேறு இடங்களில் நுழைய நிலவும் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவும் சூழல் காரணமாக போட்டியை நடத்துவதற்கு சாத்தியம் இல்லாததால் உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்தது.

அடுத்த ஆண்டுக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டியை நடத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதுடன், 2023-ம் ஆண்டு வரை உலக ஜூனியர் போட்டியை நடத்தும் உரிமம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. எனவே இந்த ஆண்டுக்கான போட்டியை மேலும் தள்ளிப்போட முடியாது என்றும், உலக ஜூனியர் போட்டியை நடத்த நியூசிலாந்து தொடர்ந்து ஆர்வம் காட்டியதால் 2024-ம் ஆண்டுக்கான போட்டியை நடத்தும் உரிமையை அந்த நாட்டுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News