செய்திகள்
எம்எஸ் டோனி

ஐந்து நாள் முகாமை சென்னையில் நடத்த டோனி கூறியது ஏன்?: சிஎஸ்கே சிஇஓ விளக்கம்

Published On 2020-08-28 09:05 GMT   |   Update On 2020-08-28 09:05 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கொடுத்த ஆலோசனை பேரில்தான் சேப்பாக்கத்தில் ஒருவார முகாம் நடத்தப்பட்டது என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக 8 அணிகளும் இந்தியாவில் இருந்து 20, 21 மற்றும் 23-ந்தேதிகளில் புறப்பட்டன.

சென்னை அணி துபாய் புறப்படுவதற்கு முன் ஒருவார பயிற்சி முகாம் நடத்த விரும்பியது. தமிழக அரசிடம் அனுமதி பெற்று முகாமை நடத்தியது. முகாமின்போது எம்எஸ் டோனி, ரெய்னா, அம்பதி ராயுடு போன்ற முன்னணி வீரர்கள் உள்ளூர் வீரர்களுடன் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த முகாம் நடத்துவதற்கு ஆலோசனை கூறியதே எம்எஸ் டோனிதான் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டபோது, நான் சேப்பாக்கத்தில் முகாம் நடத்துவது குறித்து தயங்கினேன். ஏனென்றால், பயோ-பப்பிள் உருவாக்கப்படும் என்பதால்.

துபாய் செல்வதற்கு முன் ஐந்து நாள் முகாம் பயனுள்ளதாக இருக்குமா? என்று டோனியுடன் கேட்டேன். அவர் தன்னுடைய கருத்தில் மிகவும் உறுதியாக இருந்தார்.

டோனி என்னிடம், சார் நாம் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாடவில்லை. சென்னையில் அனைவரும் ஒன்றிணைவது அவசியம். சென்னையில் நாம் பயோ-பப்பிள் உருவாக்க வேண்டும். அப்போதுதான் துபாயில் தரையிறங்கும்போது நமக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

ஆகவே, அந்த முகாம் அவர்களை தயார் செய்து கொள்ள பயனுள்ளதாக உள்ளது. நாங்கள் தயங்கியபோதிலும், மிகவும் உதவிகரகமாக இருந்தது. இந்த முகாமை நடத்த முடிந்த காரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.’’ என்றார்.
Tags:    

Similar News