செய்திகள்
மும்பை வான்கடே மைதானத்தில் எம்.எஸ். டோனி பெயரில் நிரந்தர இருக்கை
2011 உலக கோப்பை இறுதிப் போட்டியில் சிக்ஸ் அடித்து வெற்றிபெற வைத்த டோனியை நினைவுகூறும் வகையில் இருக்கை ஒதுக்க மும்பை கிரிக்கெட் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. வெற்றிக்கான ரன்னை இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி தனது ஸ்டைலில் சிக்ஸ் மூலம் அடித்தார்.
டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த ஷாட் மறக்க முடியாத ஒன்று. 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற பின்னர், டோனி வாங்கிய 50 ஓவர் உலக கோப்பை இதுவாகும். 1983-ம் ஆண்டுக்குப்பின் சுமார் 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
தற்போது டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரை நினைவுகூறும் வகையில், மும்பை கிரிக்கெட் சங்க உயர்மட்ட கவுன்சில் உறுப்பினர் அஜிங்க்யா நாய்க் டோனி பெயரில் நிரந்தர இருக்கை அமைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுத்தியுள்ளார்.
அஜிங்க்யா நாய்க் அந்த கடிதத்தில் ‘‘கிரிக்கெட்டில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ள எம்எஸ் டோனிக்கு மரியாதை மற்றும் நன்றி செலுத்தும் வகையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர் அடித்த கடைசி சிக்ஸ் பந்து எந்த சீட்டில் விழுந்ததோ, அந்த சீட்டிற்கு நிரந்தரமாக டோனியின் பெயரை சூட்ட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.