செய்திகள்
மைக்கேல் ஹோல்டிங்

டி20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஐ.பி.எல்.லை நடத்துவதில் எந்த தவறும் இல்லை: மைக்கேல் ஹோல்டிங்

Published On 2020-06-08 14:24 GMT   |   Update On 2020-06-08 14:24 GMT
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐசிசி, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடை பெறுமா? என்ற சந்தேகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 28-ந்தேதி நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வருகிற 10-ம் தேதி இதுகுறித்து ஐ.சி.சி. முடிவு செய்கிறது.
பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலை காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஓவர் உலகக் கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் முதல் மே மாதம் நடைபெற இருந்த ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி
காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிக்காக உலக கோப்பையை தள்ளி வைக்க பி.சி.சி.ஐ. தனது செல்வாக்கை பயன்படுத்துவதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றம்சாட்டின. இதேபோல அந்நாட்டு முன்னாள் வீரர்களும் விமர்சித்து இருந்தனர்.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியை நடத்த பி.சி.சி.ஐ. விரும்புவதில் எந்த தவறும் இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் நேரடி பதிவில் அவர் கூறியதாவது:-

20 ஓவர் உலக கோப்பை விவகாரத்தில் ஐ.சி.சி. தாமதப்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல். போட்டிக்கு இடம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்பு எந்த ஒரு நாட்டினருக்கும் அனுமதி இல்லை என்று ஆஸ்திரேலிய அரசு சொல்கிறது.

இதன் காரணமாக உலக கோப்பை போட்டி அங்கு நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம். 20 ஓவர் உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் ஐ.பி.எல் போட்டியை நடத்த பி.சி.சி.ஐ. விரும்புவதில் எந்த தவறும் இல்லை. அதற்கு எல்லா உரிமையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இருக்கிறது. அடுத்தவர்களின் போட்டியை ஆக்கிரமிக்கும் செயல் இதுவல்ல.

ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டு முறைகள் தொடக்கத்தில் சவாலாக இருக்கும். போகப்போக சரியாகிவிடும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சமபலத்துடன் இருக்கும் ஆடுகளங்களை அமைக்க வேண்டும் என்று கும்ப்ளே தெரிவித்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் பிட்ச்களில் தலையிடுவதை நான் விரும்பவில்லை. அது மைதான பராமரிப்பாளரை பொறுத்து இருக்கிறது.

இவ்வாறு மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.
Tags:    

Similar News