செய்திகள்
ரிஷப் பண்ட், விராட் கோலி

ரிஷப் பண்ட் மீது மட்டுமே பழியை தூக்கி போட முடியாது: விராட் கோலி

Published On 2020-03-02 09:50 GMT   |   Update On 2020-03-02 09:50 GMT
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்ததற்கு ரிஷப் பண்ட் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியடைந்தது. பேட்ஸ்மேன்கள் மிகமிக சொதப்பலாக விளையாடினர். மயங்க் அகர்வால் நான்கு இன்னிங்சிலும் 102 ரன்கள் எடுத்தார். இந்திய பேட்ஸ்மேன்களில் இதுதான் அதிகபட்ச ஸ்கோராகும்.

ரிஷப் பண்ட் நான்கு இன்னிங்சில் (19, 25, 12 மற்றும் 4) 60 ரன்களே சேர்த்தார். அவருக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுத்த பிறகும் சொதப்பியதால் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். நியூசிலாந்து கடைநிலை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடிய நிலையில், ரிஷப் பண்ட் 7-வது வீரராக களம் இறங்கி ரன்கள் குவிக்க தவறினார்.

இந்நிலையில் இந்திய அணி தோல்விக்கு ரிஷப் பண்ட் மீது மட்டுமே பழியை போடுவது சரியானது அல்ல என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவில் இருந்து ரிஷப் பண்டுக்கு ஏராளமான வாய்ப்புகள் நாம் கொடுத்துவிட்டோம். அவர் சிறப்பாக விளையாடவில்லை. என்றாலும் அவர் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு அணிக்கு திரும்பினார்.

ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடிய சரியான நேரத்தை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அவர்களை முன்னதாகவே களம் இறக்கி விளையாட வைத்தால், நம்பிக்கையை இழக்க நேரிடும். ஒட்டு மொத்தமாக நாங்கள் சிறப்பாக வளையாடவில்லை. அவரை மட்டும் தனியாக குற்றம்சாட்டுவதை நான் நம்பவில்லை. அணியாக இருந்தாலும், பேட்டிங் வரிசை என்றாலும் நாங்கள் இணைந்தே பொறுப்பை ஏற்றுக் கொள்வோம்.

எந்தவொரு வீரருக்கும் அணியில் நிரந்தரமாக இடம் உண்டு என்பதை நான் பார்க்கவில்லை. அணியில் இப்படி ஒரு கொள்கையைத்தான் நாங்கள் உருவாக்கி வைத்திருக்கிறோம். வீரர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கடினமாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.



அணியின் ஒவ்வொரு போட்டியிலும் இடம் பெறுவேன் அல்லது அணியில் தவிர்க்க முடியாத நபர் நான் என்று ஒருவராலும் கூற இயலாது. இந்த நேரத்தில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடவில்லை. அவரது ஆட்டத்தில் அதிக அளவில் பயிற்சி மேற்கொண்டார். அதனால் இது சரியான நேரம் என்று நினைத்தோம். ஏனென்றால், அவர் ஆடிய விதம், கடைசி நிலை வரிசையில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நினைத்தோம்’’ என்றார்.
Tags:    

Similar News