செய்திகள்
விராட் கோலி, டிரென்ட் போல்ட்

நெருக்கடி கொடுத்து விராட் கோலியை அவுட்டாக்கியது திருப்தி அளிக்கிறது: டிரென்ட் போல்ட்

Published On 2020-03-01 12:15 GMT   |   Update On 2020-03-01 12:15 GMT
உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட் கோலியை நெருக்கடிக்குள்ளாக்கி அவுட்டாக்கியது திருப்தி அளிக்கிறது என டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 242 ரன்களும், நியூசிலாந்து 235 ரன்களும் சேர்த்தன. பின்னர் 2-வது இன்னிங்சில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் மளமளவென சரிந்தனர்.

இதனால் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் 90 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். நான்கு இன்னிங்சில் விளையாடிய அவரால் ஒரு இன்னிங்சில் கூட 20 ரன்களை தாண்ட முடியவில்லை.

இந்நிலையில் விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்து, அவரது விக்கெட்டை வீழ்த்தியது திருப்தி அளிக்கிறது என நியூசிலாநது வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிரென்ட் போல்ட் கூறுகையில் ‘‘விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையிலேயே அவர் எங்களுக்கு மிகப்பெரிய வீரர். அவர் மீது போதுமான அளவு நெருக்கடியை சுமத்த முயற்சி செய்தோம். பவுண்டரிக்கான பந்துகளை வீசி அவரை தவறு செய்ய தூண்டினோம்.

அவரை இரண்டு முறை நாங்கள் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாகவே இந்தியாவில் அவர்கள் குறைவான பவுன்சர் மற்றும் ஸ்லோ பிட்சியில் விளையாடக் கூடியவர்கள். நியூசிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை மாற்றிக் கொள்ள  நேரம் தேவைப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News