செய்திகள்
விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - இரண்டாவது இன்னிங்சில் இந்தியா திணறல்

Published On 2020-03-01 06:47 GMT   |   Update On 2020-03-01 06:47 GMT
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. பிருத்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தனர். இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களில் சுருண்டது. 

நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். வாக்னர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லாதம் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். பந்துவீச்சில் அசத்திய கைல் ஜேமீசன் பேட்டிங்கிலும் அசத்தினார். அவர் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் ஜடேஜா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 7 ரன்கள் முன்னிலை வகித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடத் தவறினர். இதனால் முக்கிய ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 36 ஓவரில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்திய அணியில் அதிகமாக புஜாரா 24 ரன் எடுத்தார். தற்போது இந்திய அணி 97 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 

நியூசிலாந்து சார்பில் போல்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Tags:    

Similar News