செய்திகள்
புஜாராவை போல்டாக்கிய மகிழ்ச்சியில் டிரென்ட் போல்ட்

விராட் கோலி, புஜாரா மீண்டும் சொதப்பல்: ராகானே, விஹாரி காப்பாற்றுவார்களா?- 39 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா

Published On 2020-02-23 08:10 GMT   |   Update On 2020-02-23 08:11 GMT
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சில் 144 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ஆல்-அவுட். இஷாந்த் சர்மா 5 விக்கெட் மயங்க் அகர்வால் 58 ரன்கள் சேர்ப்பு விராட் கோலி(19), புஜாரா (11) ஏமாற்றம்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 165 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் (14), கிராண்ட் ஹோம் (4) ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.  கிராண்ட் ஹோம் 43 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்ட வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஜாமிசன் 44 ரன்னும், போல்ட் 38 ரன்னும் எடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. பிரித்வி ஷா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா நீண்ட நேரம் விளையாடினார். ஆனால் அவரால் ரன்கள் குவிக்க இயலவில்லை. அவர் 81 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தா்ர. அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். என்றாலும் 58 ரன்னில் வெளியேறினார்.

முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி 2-வது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அப்போது இந்தியா 113 ரன்கள் எடுத்திருந்தது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ரகானே உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காத வண்ணம் பார்த்துக் கொண்டது. இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியா 39 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் ரகானே- விஹாரி ஜோடி சிறப்பான விளையாடி 100 ரன்களுக்கு மேல் குவித்து ரிஷப் பண்ட் மற்றும் அஸ்வின் பொறுப்புடன் விளையாடினால் இந்திய போராட வாய்ப்புள்ளது. இல்லையெனில் தோல்வியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
Tags:    

Similar News