செய்திகள்
இன்சமாம்

அந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்

Published On 2020-02-19 07:10 GMT   |   Update On 2020-02-19 07:10 GMT
கிரிக்கெட்டின் வெவ்வேறு காலக்கட்டங்களில் அந்த 3 வீரர்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் தெரிவித்துள்ளார்.
லாகூர்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்- ஹக்.

அந்நாட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராவார்.

இந்த நிலையில் கிரிக்கெட்டின் வெவ்வேறு காலக்கட்டங்களில் 3 வீரர்கள் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று இன்சமாம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

3 வீரர்கள் கிரிக்கெட்டில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள். அவர்கள் இந்த விளையாட்டில் புதிய நடைமுறையை கொண்டு வந்தவர்கள் ஆகும். அவர்களால் ஆக்ரோ‌ஷம், கற்பனைக்கு எட்டாத பேட்டிங், புதுமையான அணுகுமுறையை கொண்டு வர முடிந்தது.

கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய முதல் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த விளையாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் ஆடிய காலக்கட்டத்தில் வேகப்பந்து வீரர்களை பேட்ஸ்மென்கள் பின்னால் வந்து (பேக்புட்) ஆடுவார்கள்.

அப்போது வேகப்பந்து வீச்சை முன்னாள் வந்து (பிரன்ட் புட்) ஆட முடியும் என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். வேகப்பந்து வீச்சை அடித்து ஆட முடியும் என்று ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுத்தவர் ரிச்சர்ட்ஸ். அவர் எப்போதுமே ஒரு சிறந்த வீரர் ஆவார்.

2-வது மாற்றத்தை கொண்டு வந்தவர் ஜெயசூர்யா. இலங்கையை சேர்ந்த அவர் முதல் 15 ஓவர்களில் வேகப்பந்தில் அதிரடியாக விளையாட முடியும் என்று நிரூபித்தவர். அவரது வருகைக்கு முன்பு பந்தை தூக்கி வானத்துக்கு அடித்தால் முறையான பேட்ஸ்மென் இல்லை என்பார்கள்.

ஆனால் அவர் முதல் 15 ஓவர்களில் வேகப்பந்தை அதிரடியாக ஆடி புதிய அத்தியாயத்தை உருவாக்கினார்.



டிவில்லியர்ஸ் மாற்றத்தை ஏற்படுத்திய 3-வது வீரர் ஆவார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அவர் கிரிக்கெட்டில் 3-வது மாற்றத்தை ஏற்படுத்தியவர். இன்றைய காலக்கட்டத்தில் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் வீரர்கள் அதிரடியாக ஆடுவதற்கு அவர்தான் காரணம்.

பொதுவாக பேட்ஸ்மென்கள் நேராக தூக்கி அடித்து ஆடுவார்கள். ஆனால் இதில் டிவில்லியர்ஸ் தான் புதுமையை புகுத்தினார். சுவிப் மற்றும் ரிவர்ஸ் சுவிப் மூலம் பந்தை தூக்கி அடித்து மாற்றத்தை ஏற்படுத்தினார்.

ரிச்சர்ட்ஸ், ஜெயசூர்யா, டிவில்லியர்ஸ் ஆகிய 3 வீரர்களுமே தொழில்நுட்பத்தை அறிந்த முறையான பேட்ஸ்மென்கள்தான். மனவலிமையும், திறமையும் மூலம் அவர்களால் மாற்றத்தை கொண்டுவர முடிந்தது.

ரிச்சர்ட்ஸ் 121 டெஸ்டில் 8540 ரன்னும் (சராசரி 50.23), ஒருநாள் போட்டியில் 6721 ரன்னும் (சராசரி 47) எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் அவரது ஸ்டிரைக்ரேட் 90.20 ஆகும்.

ஜெயசூர்யா 1996 உலக கோப்பையில் முதல் 15 ஓவர்களில் அதிரடியாக விளையாடி தனது அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.

டிவில்லியர்ஸ் 114 டெஸ்டில் 8765 ரன்னும், 228 ஒருநாள் போட்டியில் 9577 ரன்னும், 78 இருபது ஓவர் போட்டியில் 1673 ரன்னும் எடுத்துள்ளார்.

Tags:    

Similar News