செய்திகள்
ஷேன் பாண்ட், பும்ரா

பும்ராவுக்கு எதிரான நியூசிலாந்து அணியின் அணுகுமுறையை மற்ற அணிகளும் பின்பற்றும்: ஷேன் பாண்ட்

Published On 2020-02-18 14:48 GMT   |   Update On 2020-02-18 14:48 GMT
பும்ராவுக்கு எதிராக நியூசிலாந்து அணி கடைபிடித்த எச்சரிக்கையுடன் விளையாடும் அணுகுமுறையை மற்ற அணிகளும் பின்பற்றும் என ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தார். இவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதை பேட்ஸ்மேன்களால் புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் நியூசிலாந்து தொடரின்போது பும்ரா பந்தை அடித்து விளையாடாமல் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ளும் அணுமுறையை பேட்ஸ்மேன்கள் கடைபிடித்தனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் பும்ரா ஏமாற்றம் அடைந்தார்.

இந்நிலையில் இந்த அணுகுமுறையை மற்ற அணிகளும் கடைபிடிக்கும் என நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷேன் பாண்ட் கூறுகையில் ‘‘நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பும்ராவை எதிர்த்து சிறப்பாக விளையாடினார் என்று நினைக்கிறேன். அவர்கள் பும்ராவை மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடினார்கள். அதேவேளையில் அனுபவம் இல்லாத (நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்) வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இருந்தனர். பும்ராவின் கடினமான டெலிவரியை கண்டுபிடித்தனர்.

மற்ற அணிகளும் பும்ராவின் கடினமான டெலிவரியை தற்போது கண்டுபிடித்தால், மற்ற பந்து வீச்சாளர்கள் மீது தாக்குதல் நடத்தலாம். பந்து வீச்சாளர்கள் ஒரு குரூப்பாக செயல்படுவது அவசியம். ஆடுகளம் பிளாட்டாக இருக்கும்போது பந்து வீசுவது எளிதானது அல்ல. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ரா சிறப்பாகத்தான் பந்து வீசினார். இருந்தாலும் அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

டெஸ்ட் தொடரில் பும்ரா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார்.
Tags:    

Similar News